ஒரு கதாநாயகி என்றால் கண்டிப்பாக ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட வேண்டும். ஜிகினா டிரஸ்சில் ஹீரோவின் கனவில் நுழைந்து ஐஸ்லாந்தில் ஆட்டம் போட வேண்டும். ஈவ் டீசிங் பாடல் ஒன்றுக்கு முகம் கடுக்க மூவ்மென்ட் கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் தொடர்கிற இலக்கணத்தை மீறி வருகிற ஒரே நாயகி அஞ்சலி மட்டும்தான்!
அவருக்கும் குரூப் டான்ஸ் பாடல்கள் மீதும், முழு நீள கமர்ஷியல் படங்கள் மீதும், அரை ஸ்கர்ட் மீதும் ஆசை வரும்தானே? அந்த ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறது மகாராஜா திரைப்படம். ஆனால் கமர்ஷியல் அம்சங்களோடு எதார்த்தத்தையும் மிகைப்படுத்தாமல் சொல்லியிருக்கிறாராம் புதுமுக இயக்குனர் டி.மனோகரன். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சில பாடல்களை திரையிட்டார்கள்.
முந்தைய தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் நடுவே இருக்கிற இடைவெளி பற்றி பேசுகிற படம் இது. என்னுடைய இருபத்தைந்து வருட சினிமா வாழ்க்கையில் நான் ரசித்து நடித்த படம் இது என்றார் நாசர். இப்படத்தின் நாயகனான சத்யா இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும், முதன் முறையாக ஒரு ஹீரோவாக முழுமையடைந்திருக்கிறார் என்று நம்ப வைத்தது அந்த பாடல் காட்சிகள். ட்யூன்களில் சதிராட்டம் போட்ட டி.இமானுக்கும் கூடை நிறைய பாராட்டுகள்!
"சத்யாவை பார்க்கும் போது என் மகன் ஜெயம் ரவியை பார்க்கிற மாதிரியே இருக்கு. அவருக்கு பெரிய எதிர்காலம் அமையணும்" என்று வாழ்த்தினார் விழாவில் பேசிய எடிட்டர் மோகன். ஒரு முன்னணி ஹீரோவின் அப்பா, தன் மகன் போலவே இருக்கிறார் என்று இன்னொரு ஹீரோவை வாழ்த்துவது அபூர்வம். இதை நினைத்து நாம் ஆச்சர்யப்படும் போதே, மேடையில் பேசிய அத்தனை பேரும் அதையே கூறினார்கள்.
சத்யாவை ஜெயம் ரவிக்கு தம்பியாக நடிக்க வைக்கும் எண்ணம் கூட இருக்கிறதாம் எடிட்டர் மோகனுக்கு. 'மகாராஜா'தானே அதையெல்லாம் முடிவு செய்ய வேண்டும்?